பக்கம் எண் :

அறத்துப் பால்
ஊழியல்

அதிகாரம் 38. ஊழ்

அஃதாவது, பழம்பிறப்புக்களிற் செய்யப்பட்ட இருவினைப்பயன் செய்தவனையே செய்த முறைப்படி சென்றடையும் இயற்கை யொழுங்கு. இது முறைப்படி வருவதால் முறையென்றும் ஊழ் என்றும், அவரவர்க்குரிய இன்ப துன்பப்பகுதிகளை வகுப்பதால் பால் என்றும் வகுத்தான் என்றும், தெய்வ ஏற்பாடு போலிருப்பதால் தெய்வம் என்றும் பால்வரை தெய்வம் என்றும், பெயர் பெறும். இனி மாறாவியல்பாயிருப்பதால் இயற்கையென்றும் பெயர் பெறுவதாம்.

இதுஅறம் பொருளின்பம் மூன்றற்கும் பொதுவேனும், இருவினைப் பயனாயிருப்பதாலும், இனிமேலேனும் நல்லூழைத் தோற்றுவித்தற்கு இன்று முதல் நல்வினையே செய்க என்று ஏவும் வகையிலும், அறத்துப்பாலொடு சேர்க்கப்பட்டு, அதே சமையத்தில் பொருளோடிதற்குள்ள நெருங்கிய தொடர்பை யுணர்த்தற்குப் பொருட்பாலின் முன்பும் துறவற வியலின் இறுதியிலும் வைக்கப் பெற்றதென அறிக.

 

ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி.

 

கைப்பொருள் ஆகுஊழால் அசைவின்மை தோன்றும்-ஒருவன் கையிற் பொருள் சேர்தற்குக் கரணகமான நல்லூழால் முயற்சியுண்டாகும்; போகு ஊழால் மடி தோன்றும் -அவன் கையிலுள்ள பொருள் தீர்தற்குக்கரணகமான தீயூழாற் சோம்பலுண்டாகும்.

'ஆகூழ்,' 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் கரணகப் பொருளன . அசைவு சோம்பல். ஒருவனுக்குச் செல்வம் தன்முயற்சியாலும் வரும்; முன்னோர் தேட்டாகப் பிறர் முயற்சியாலும் வரும். அங்ஙனமே ஒருவன்செல்வத்திற்கு அழிவு அவன் செயலாலும்வரும்; கள்வர் பகைவர் முதலிய பிறர் செயலாலும் வரும். ஒருவனுக்குச் செல்வத்தின் ஆக்கம் போன்றே அழிவும் பிறரால்மட்டுமன்றித் தன்னாலும் நேருமாறு,ஊழே முயற்சியையும் சோம்பலையும் தோற்றுவிக்கு மென்பது இங்குக் கூறப்பட்டது. 'கைப்பொருள்' என்பது முன்னும் பின்னுஞ் சென்றியைதலால் தாப்பிசைப்பொருள்கோளும் இடை நிலை விளக்கணியுமாகும்.