பக்கம் எண் :

இருவேறுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

 

உலகத்து இயற்கை இருவேறு -உலகத்தில் உடைமைபற்றி ஊழினாலுண்டாகிய இயற்கை இருவேறு நிலைமைய தாம்; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு- செல்வராதலும் வேறு; தெள்ளிய அறிஞராதலும் வேறு.

அறிவுடையோர் நல்லவராயும் உலக இன்பம் பொருளாற்பெறக் கூடியதாயு மிருத்தலால், அறிவுடையோரன்றோ செல்வராயிருத்தல் வேண்டும்! அங்ஙனமன்றி அறிவுடையோர் வறியராயிருந்து துன்புறவும் அல்லாதார் செல்வராயிருந்து இன்புறவுமன்றோ காண்கின்றோம்! இதற்குக் கரணகம் ஊழ்வேறுபாடே யென்பது கருத்தாம்.

அறிவுடையோர் பொதுநலங்கருதிப் பல ஒழுக்க வரம்புகளையும் நெறிமுறைகளையுங் கைக்கொண்டு நேர்மையாக வாழ்க்கை நடத்துவது பொருளீட்டு நெறிக்கு மாறாயிருப்பதால், அவர்களிடத்திற்செல்வஞ் சேர்வதில்லை. என்றுந் தன்னலமாக விருந்து எல்லார்க்கும் நல்லவராக நடித்துப் பொருளீட்டுவதையே குறிக்கோளாக் கொண்டு, நெறிமுறையொன்றுங் கடைப்பிடியாதவரிடமே செல்வஞ் சேர்வதாம். இம் மாறுபட்ட நிலைமையையே,

"பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்
தல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே
பூவின் கிழத்தி புலந்து"


என்று நகைச் சுவைக் கரணகங் காட்டிப் பாடினார் பண்டைப் புலவரொருவர்.