பக்கம் எண் :

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

 

வகுத்தான் வகுத்த வகை அல்லால் - ஊழ்த் தெய்வம் அவரவர்க்கு இன்பதுன்பம் வகுத்த வகைப்படி யல்லாமல்; கோடி தொகுத்தார்க்கும்-கோடிக்கணக்கிற் பொருளை வருந்தி யீட்டியவர்க்கும்; துய்த்தல் அரிது - அப்பொருளால் இன்பம் நுகர்தல் உண்டாகாது.

தீயூழுடையான் செல்வந்தேடுவதற்கு நல்ல நிலைமைகளும் தீயனவாக முடியுமென்று மேற்கூறினார். இனி, நல்லநிலைமைகள் நல்லனவாகவே முடிந்து செல்வஞ்சேரினும், அச்செல்வத்தை அவன் நுகரக் கொடுத்து வைக்கப்பெறான் என்று இங்குக் கூறினார். ஒருவன் தான் தேடினதைத் தான் நுகராமை நோய், மூப்பு, சாக்காடு, கருமித்தனம், களவு, கவர்வு, இயற்கைச்சேதம் முதலிய பல கரணகங்களால் நேர்வதாம்.

"பால்வரை தெய்வம் வினையே பூதம்
--------------------------------
பால்பிரிந் திசையா வுயர்திணை மேன".

(கிளவி. 58)

"நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே"
(கிளவி. 59)

"இசைத்தலு முரிய வேறிடத் தான".
(கிளவி. 60)


என்னும் தொல்காப்பிய நெறிப்படி, 'வகுத்தது' என்று சொல்லால் அஃறிணையா யிருப்பது 'வகுத்தான்' என்று உயர்திணையாயிற்று. 'கோடி' என்பது பால்பகா வஃறிணைப்பெயராகக் கொள்ளப்படும். அவ்வெண் இங்குப் பொருள்களை மட்டுமின்றி உயர்ந்த காசையுங் குறிக்கும். ஒருவன் செல்வத்தைக் காசு வகையில் மதிப்பதே வழக்கமாதலாலும், காசைக் கொண்டு எல்லா நுகர் பொருள்களையும் என்றும் பெறலாமாதலாலும், பொருள்களை விளைப்போரும் தொகுப்போரும் பெறுவோரும் தம் நுகர்ச்சிக்கு மிஞ்சியவற்றைக் காசாக மாற்றிவிடுவராதலாலும், இட்டுவைக்க இடமில்லா வாறும் நாட்பட்டுக்கெடுமாறும் முன்பின் வேண்டியபொருள்களையெல்லாம் ஒருங்கே வாங்குவாரின்மையாலும், கோடியென்பது பொருட்டொகை யென்பதினுங் காசுத்தொகை யென்பதே பொருத்தமாம்.கோடியென்னும் பெருந்தொகை தொகுத்தார்க்கும் என்னும் சிறப்பும்மை தொக்கது.