பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 39. இறைமாட்சி

இன்பமுள்ளிட்ட இல்லற வாழ்க்கைக்கும் உலகநடப்பிற்கும் இன்றியமையாததும் அறவழியில் ஈட்டப்பட வேண்டியதுமான, பொருளைப் பற்றிக் கூறும் பெரும் பகுதி பொருட்பாலாகும். அறம் பொருளின்பம் என்னும் முறைப்படியும் இது அறத்திற்கு அடுத்த தாகும்.

1.அரசியல்

பொருளீட்ட வேண்டிய மக்களெல்லாருள்ளும் அரசன் தலை சிறந்தவனாதலாலும், மக்களெல்லாரும் தத்தம் தொழில் செய்து பொருளீட்டுதற்கு அரசனது காவல் இன்றியமையாததாதலாலும் அரசாட்சி கூறவே அரசனுங் குடிகளும் பொருளீட்டுதல் அதனுள் ஒருங்கே யடங்கும்.

அரசாட்சி அரசியல், உறுப்பியல் என இருபாற்படும். அவற்றுள் அரசியலை இருபத்தைந் ததிகாரத்தாலும் எழுதிறப்பட்ட உறுப்பியலை நாற்பத்தைந் ததிகாரத்தாலும் அமைத்து, முதற்கண் அரசியல் கூறுகின்றார்.

பரிமேலழகர் வகுத்த ஒழிபியல் என்பது குடியென்னும் உறுப்பா யடங்குவதை, போக்கியார் பெயரிலுள்ள

"அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துரைநா டரண்பொரு ளொவ்வொன் -றுரைசால்
படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று
குடியெழுபான் றொக்கபொருட் கூறு"

என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுளாலறிக.

இறைமாட்சி

அஃதாவது, அரசாளுந் தலைவனாகிய இறைவனுக்கு இருக்க வேண்டிய மாண்புடைய அறிவாற்றலும் நற்குண நற்செய்கைகளுமாம். இறுத்தல் (எங்குந்) தங்குதல். இறுப்பது இறை. இத்தொழிற் பெயர் ஆகுபெயராய்த்தன் நாடுமுழுதும் அதிகாரத்தால் தங்கியிருக்கின்ற அரசனைக் குறிக்கும். இறைவன் என்பது ஆண்பாலீறு பெற்ற பெயர். இவ்விருவடிவும் எங்கும் நிறைந்திருக்கின்ற கடவுளையுங் குறிக்கும். இப்பெயர்ப் பொதுமையால், அரசன் முதற்காலத்தில் கண்கண்ட தெய்வமாகக் கருதப்பெற்றமை அறியப்படும்.

 

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.

 

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான்-படையுங் குடியும் பொருளும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறுறுப்புக்களையு முடையவன் ;அரசருள் ஏறு - அரசருள் ஆணரிமா போல்வான்.

நாடில்லாமற் குடியிருக்க முடியாதாகலின், இங்குக் குடியென்றது நாட்டையுஞ் சேர்த்தென அறிக. ஆகவே, இங்குக் கூறப்பட்ட வுறுப்புக்கள் உண்மையில் ஏழாம். அதனால் நாடு என்பது ஒரு தனியுறுப்பாக 74-ஆம் அதிகாரத்திற் கூறப்பட்டிருத் தலுங் காண்க. (நாடு) குடி, பொருள், படை, அரண், அமைச்சு, நட்பு என்பதே இயற்கை முறையாயினும், செய்யுளமைப்புநோக்கி மாற்றிக் கூறப்பட்டன. 'ஆறும்' என்னும் முற்றும்மையால், அவற்றுள் ஒன்று குறையினும் அக்காலத் தரசியல் நீடித்துச் செல்லாதென்பதாம். கூழ் என்பது உணவு. அது இங்கு அதற்கு மூலமான பொருளை யுணர்த்திற்று. ஏறு போல்வானை ஏறென்றது உவமையாகுபெயர். சில விலங்கின ஆண்பாற் பொதுப்பெயரான ஏறென்பது சிறப்புப்பற்றி அரிமாவின் ஏற்றைக்குறித்தது. ஏழுறுப்புமுள்ளவனைப் பகை யரசன் பெரும்பாலும் வெல்லமுடியா தென்பது கருத்து.