பக்கம் எண் :

தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.

 

நிலன் ஆள்பவற்கு - நாட்டையாளும் அரசனுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா - அரசக்கருமங்களை விரைந்து செய்யுந்தன்மையும் அவற்றை யறிதற்கேற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும்.

கல்வியறிவினால் வினை வெற்றியாக முடியும் வகை தீர்மானிக்கும் திறமும், துணிவினால் தீர்மானித்ததை நெஞ்சுரத்துடன் நிறைவேற்றுவதும், தூங்காமையால் உரியகாலத்தில் தொடங்கி முடிப்பதும், கூடும் என்பதாம். இவற்றுட் கல்வி ஏழுறுப்புக்களையும் நோக்கியது. ஏனையிரண்டும் வினைக்குரியன. உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.