பக்கம் எண் :

இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

 

இயற்றலும் - அரசியற்குப் பொருள் வருவாய்களை மேன்மேலமைத்தலும்; ஈட்டலும் - அவ்வருவாய்களின் வழி வந்த பொருள்களை ஓரிடத்துத் தொகுத்தலும்; காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கவராமற் காத்தலும்; காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம் பொருளின்ப வழிகளிற் செலவிடக் கூறிடுதலும்; வல்லது அரசு - வல்லவனே நல்லரசன்.

பொருள்களாவன , பொன் மணிமுதலிய இயற்கை விளை பொருள்களும், நெல் பயறு முதலிய செயற்கை விளை பொருள்களும், அணிகலம் மது முதலிய செய்பொருள்களுமாம். அவை வரும் வழிகளாவன, குடிகள் செலுத்தும் வரியும், சிற்றரசர் இடும் திறையும் பகையரசரை வென்று பெறும் தண்டமும், புதையலும், நட்பரசர் நன்கொடையும் பிறவுமாம். பொருள்களைக் கவரக்கூடிய பிறர் கள்வர், கொள்ளைக்காரர், பகைவர், உறவினர், பணியாளார் முதலியோர்.கோயில்கள், துறவோர் பள்ளிகள், ஊட்டுப் புரைகள் முதலியவற்றிற்கும் புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்குங் கொடுத்தலை அறங்கல்விப்பொருட்டாகவும்; நாற்படை, செண்டுவெளி, அரண், நீரணை, பாசனநீர்நிலை, பகைவர் நட்புப்பிரிப்பு, தன்னட்புச்சேர்ப்பு, படையெடுப்பு, போர், அரசியல் திணைக்களங்கள் முதலியவற்றிற்குச் செலவிடுதலைப் பொருட் பொருட்டாகவும்; நீராழி மண்டம், தெப்பக் குளம், செய்குன்று, இளமரக்கா, உரிமைச்சுற்றம் , சாக்கைக் கூத்து முதலியவற்றிற்குச் செலவிடுவதை இன்பப் பொருட்டாகவுங் கொள்க. இயற்றல் முதலிய நால்வினைக்கும் மிகுந்த சூழ்வினையும் ஆள்வினையும் வேண்டியிருத்தலின், 'வல்லது' என்றார். அரசு என்பதற்கு மேல் உரைத்தவா றுரைக்க.