பக்கம் எண் :

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன்
மீக்கூறு மன்ன னிலம்.

 

காட்சிக்கு எளியன் - முறைவேண்டினவர்க்கும் குறைவேண்டினவர்க்கும் காண்பதற் கெளியவனாய்; கடுஞ்சொல்லன் அல்லனேல்-பகைவரல்லாத யாரிடத்தும் இன்சொற் சொல்பவனாயிருப்பின்; மன்னன் நிலம் மீக் கூறும் - அவ்வரசனது நாட்டை ஏனை நாடுகளினுஞ் சிறந்ததாக உலகம் உயர்த்துக் கூறும்.

முறைவேண்டினவர் வலியவரால் தாக்குண்டும் இழப்புண்டும் துன்புற்றவர். குறைவேண்டினவர் வறுமையால் வருந்தியவர். காட்சிக்கெளிமையாவது அலுவல் நேரத்தில் ஓலக்க மண்டபத்திலும் நெருக்கடி நிலைமையில் அரண்மனையிலும் காணக்கூடியவனாயிருத்தல். கடுஞ் சொல்லாவது சினத்தாலும் பொருளாலும் விளைவாலும் தீதாகிய சொல். நாட்டையுயர்த்துக் கூறுதல் அரசனையுயர்த் தலையுந்தழுவும். உலகம் என்னும் ஏழுவாய் தொக்கு நின்றது.


உலகம் செங்கோலரசனது நாட்டை மீக்கூறுவது.

"கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா
வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே". (சிலப். 13:5-10)
என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாண்டியன் நாட்டைச் சிறப்பித்துக் கூறியது போன்றது.