பக்கம் எண் :

இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு.

 

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடன் வேண்டியவற்றைக் கொடுத்து அன்பாகக் காக்கவல்ல அரசனுக்கு; இவ்வுலகு தன் சொலால் தான் கண்ட அனைத்து - இவ்வுலகம் தன்புகழோடு கூடித் தான் கருதியவாறு அமைவதாம்.

'இன்சொல்' குரலாலும் பொருளாலும் விளைவாலும் இனிய சொல். ஈதல் புலவர், பாணர், கூத்தர் முதலியவர்க்குப் பரிசும் முற்றூட்டும் அளித்தலும், கோயில்கள், துறவோர் பள்ளிகள், ஊட்டுப் புரைகள் முதலியவற்றிற்கு இறையிலியாக அறப்புறம் விடுதலும். அளித்தல் மேற்கூறிய ஐவகையாலும் தீங்கு நேராமற்காத்தல். இம் மூன்றும் ஒருங்கே யமைதல் அரிதாதலின் 'வல்லாற்கு' என்றார். இவ்வுலகம் தான் கருதியவாறு அமைதலாவது தனக்கு வயப்பட்டுத் தான் விரும்பிய வாறு பயன்படுதல்.