பக்கம் எண் :

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் - நடுநிலையாகத் தீர்ப்புச்செய்து எவ்வகையிலும் துன்பம் நேராது குடிகளைக் காக்கும் அரசன்; மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பால் மாந்தனாயினும் அவனால் ஆளப்பெறும் மக்களாற் கடவுளென்றே கருதப்படுவான்.

முறைசெய்தலாவது, கொற்கைப் பாண்டியன் போலத் தன்னையும் மன் ( மனு) முறைகண்ட சோழன் போலத் தன் மகனையும் தண்டித்தல். காப்பாற்றுதல் தெய்வத்தால் வருந் துன்பத்தையும் வழிபாடு, நோன்பு, திருவிழா முதலியவற்றால் தடுத்துக்காத்தல். இறை இறைவன் என்னும் இருவடிவிலுமுள்ள கடவுட்பெயர் அரசனையுங் குறிப்பதும், கோயில் என்னும் சொல் கடவுள்வழிபாட்டு மனைக்கும் அரசனது அரண்மனைக்கும் பொதுப் பெயராயிருப்பதும், இக்குறட் கருத்தை மெய்ப்பிக்கும். திருவாய்க்கேள்வி, திருமந்திரவோலை முதலிய அரசியலதிகாரிகளின் பதவிப்பெயர்கள், திரு என்னும் அடை பெற்றிருப்பதும் இக்கருத்துப் பற்றியே.