பக்கம் எண் :

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

 

செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - அரசன் தீய வழியிற் செல்லும் போது அஞ்சாது இடித்துரைக்கும் நல்லமைச்சர், செவிக்கு இன்னாதனவாகச் சொல்லும் சொற்கள் பொறுக்கத் தகாதனவாயினும் அவற்றின் இனிய விளைவு நோக்கிப் பொறுத்துக்கொள்ளும் பண்புடைய அரசனது; கவிகைக் கீழ் உலகு தங்கும்-குடைநிழலில் உலகந்தங்கும்.

'செவிகைப்ப' என்பதற்கேற்ப இடித்துரைக்கும் நல்லமைச்சர் என்பது வருவித்துரைக்கப்பட்டது. கைத்தல் கசத்தல். இனித்தல் இனிமையைக் குறித்தலாற் கசத்தல் இன்னாமையைக் குறித்தது. நாவின் புலம் செவியின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது இனம் பற்றி. 'கவிகை' 'உலகு' இரண்டும் ஆகுபெயர். தங்குதல் இனிதாய். வாழ்ந்திருத்தல். சிறந்த அறிவுரைகளைக் கைக்கொள்வதால் உலகம் முழுதும் ஆள்வான் என்பதாம்.