பக்கம் எண் :

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.

 

அறத்தான் வருவதே இன்பம் - அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது; மற்று எல்லாம் புறத்த-வேறு தீயவழியில் வருவனவெல்லாம் இன்பம்போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே; புகழும் இல-அதோடு அவை புகழுடையனவும் ஆகா.

இங்கு இன்பமென்று பொதுப்படக் கூறியது உலகின்பமாகிய சிற்றின்பத்தை; அறவழியல்லது வேறுவழியிற் பேரின்பம் ஒருவன் பெறமுடியாதாகலின். உலக வின்பம் ஒருபுலவின்பமும் பல புலவின்பமும் ஐம்புலவின்பமாகிய முற்றின்பமும் என முத்திறப்படும். வண்ணவோவியமும் எழுவும்யாழும் இன்னடிசிலும் நறுவிரையும் மெல்லணைக் கட்டிலும் போல்வன, ஒருபுலவின்பமே தருவன; அழகிய வளமனையும் பல்வகைப் பழுமரக்காவும் போல்வன பலபுலவின்பந் தருவன; கட்டழகியான கற்புடை மனைவியெனின் ஐம்புலவின்பமும் ஒருங்கே தர வல்லாள். இனி, இன்பப் பொருள் போன்றே அதனைக்கொள்ளும் செல்வப்பேறும் உள்ளத்திற்கு இன்பந்தருவதாகும். காசு தானாக இன்பந்தராவிடினும் இன்பப் பொருள்களைக் கொள்ளுங் கருவியாதல் காண்க. விலையாகக் கூடிய எல்லாப் பொருளும் காசுபோற் பயன் படுவனவே.

ஒருவன் அறவழியில் தேடிய தன்பொருளை நுகர்வதே புகழோடு கூடிய இன்பமாம்;பிறன்பொருளை நுகர்வது பழியோடு கூடிய துன்பமாம். பிரிநிலை யேகாரம் பின்னுங் கூறப்பட்டது.