பக்கம் எண் :

கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு
முடையானாம் வேந்தர்க் கொளி.

 

கொடை - தகுதியுடையவர்க்கு வேண்டுவன கொடுத்தலும்; அளி -யாவரிடத்தும் அன்பாயிருத்தலும், செங்கோல்-நேர்மையான ஆட்சியும்; குடி ஒம்பல்-தளர்ந்த குடிகளைப் பேணுதலும்; நான்கும் உடையான்-ஆகிய இந்தான்கு செயலையும் உடையவன்; வேந்தர்க்கு ஒளிஆம் - அரசரெல்லார்க்கும் விளக்காம்.

அன்பாயிருத்தல் அகமுக மலர்ந்து இனிய கூறல். 'செங்கோல் உவமையாகுபெயர். குடியென்று விதந்து கூறியது பஞ்சம், வெள்ளம், கொள்ளை, கொள்ளைநோய் முதலியவற்றால் தளர்ந்த குடிகளை அவர்களைப்பேணுதலாவது வரிநீக்கலும்வேண்டிய பொருளுதவலும் ஒளிபோல் வழிகாட்டுதலின் ஒளி யென்றார். 'ஒளி' ஆகு பெயர். மேல் 'ஈகை' என்றது ஆட்சியும் போர்வினையும் பற்றியதென்றும், இங்குக் 'கொடை' என்றது அறமுங்கலைவளர்ச்சியும் பற்றியதென்றும், வேறு பாடறிக.