பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 40. கல்வி

அஃதாவது, அரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல். அவை இலக்கணநூல், கணிதநூல், வனப்பியல், வரலாறு, அறநூல் அரசியல்நூல், போர்நூல் முதலியன. இவற்றுள் அரசியல் நூலும் போர்நூலுந்தவிர ஏனையவெல்லாம் எல்லார்க்கும் பொதுவாம். அரசியல் நூல் அமைச்சர்க்கும் போர்நூல் படைமறவர்க்கும் அரசர்க்குப் போன்றே சிறப்பாக வுரியனவாம்.

திருவள்ளுவர் வேத்தியலை அடிப்படையாகவைத்தே பொதுவியற்கும் பொருந்துமாறு பொருளீட்டு முறையைக் கூறுவதால், இங்குக் கல்வியென்றது எல்லார்க்கும் பொதுவாம். எல்லார்க்குமுரிய பொதுக்கல்வியும் சில தொழில்கட்குரிய சிறப்புக்கல்வியும் கற்றபின்பே நாகரிக மக்கள் பொருளீட்டுதலை மேற்கொள்ள வேண்டுமென்பது கருத்து. பொருளீட்டுதலாவது தத்தம் தொழிலைச் செய்தல். முந்தின அதிகாரத்தில் தூங்காமை கல்வி என்னுங் குறளிலுள்ள 'கல்வி' என்னுஞ்சொல்லால், இவ்வதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

 

கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக

 

கற்பவை கசடு அறக் கற்க-ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் பிழையறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க-அங்ஙனம் கற்றபின் அதற்கேற்ப ஒழுகுதலைக் கடைப்பிடிக்க.

'கற்பவை' என்றது பொதுக்கல்வியையும் தொழில் தொறும் வேறுபட்ட சிறப்புக்கல்வியையும் குறிக்கும். கசடறக் கற்றலாவது ஐயந்திரிபறத் தெளிவாயறிதல். நிற்றலாவது, பொதுக்கல்விக்கேற்ப அறநெறியிலொழுகுதலும் சிறப்புக்கல்விக்கேற்பச் செவ்வையாய்த் தொழில் செய்தலும் ஆம். இவ்விருவகை நடத்தையிலும் நிலைத்து நிற்க வேண்டு மென்றற்கு 'நிற்க' என்றார்.

'கற்பவை' என்பது , ஒருவர்தம் உளப்பான்மைக்கும் உடல்நிலைமைக்கும் அகக்கரண வியல்பிற்கும் ஏற்றவாறு ஒரு தொழிலைத் தெரிந்து கொண்டு, அதற்குரியவற்றைக் கற்கவேண்டு மென்பதைக் குறிப்பாயுணர்த்தும்.