பக்கம் எண் :

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

 

கண் உடையர் என்பவர் கற்றோர் -கண்ணுடைய வரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் கற்றோரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர்- மற்றக் கல்லாதவரோ வெனின் தம் முகத்தில் இரண்டு கண்களையல்ல, புண்களையே உடையர்.

நெட்டிடைப் பொருள்களையும் முக்காலச் செய்திகளையும் நூல் வாயிலாக அறியும் அறிவுக்கண்ணுடைய வரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி மாசுபடிந்து உறுத்துவதும் நோயுற்றுத் துன்பஞ் செய்வதுமான ஊன் கண்ணை மட்டு முடையவரைப் 'புண்ணுடையர்' என்றுங் கூறினார்.கற்றார் கண்போன்றே கல்லார் கண்ணும் ஏட்டைக்கண்டும் அதிலுள்ள எழுத்தைப்படிக்கத் தெரியாமையால் , அது விழிகண்குருடு போல்வது மட்டுமன்றி நோவுந்தருவ தென்று நன்மையின்மையும் தீமையுண்மையும் ஒருங்கு கூறி, கற்றாருயர்வும் கல்லாரிழிவும் விளக்கிக் காட்டினார்.