பக்கம் எண் :

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

 

கற்று அறிந்தார் - சிறந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளைச் செவ்வையாக அறிந்தவர்; தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு - தம் கல்வியால் தாம் இன்புறுவதொடு உலகமும் இன்புறுவது கண்டு; காமுறுவர்-மேன்மேலுங் கற்கவும் கற்பிக்கவும் விரும்புவர்.

தாமின்புறுதலாவது, நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளாலும், தாம் இம்மையிற்பெறும் புகழ் பொருள் போற்றுதலாலும், மறுமையிற்பெறும் நற்பத நம்பிக்கையாலும், இடையறாது மகிழ்தல். உலகின்புறுதலாவது, இன்று செவிக்கினிய சிறந்த விருந்துண்டோ மென்றும், அறியாதபல அரும்பொருள்கள் எளிதாயறிந்தோம் என்றும், இத்தகைய சொற்பொழிவு கேட்டது எம் தவப்பேறேயென்றும், இன்னுஞ் சிலமுறை கேட்பின் யாமும் புலவராய் விடுவேமென்றும், பாராட்டி மகிழ்தல். தாமின்புறுவதை உலகுமின்புற்றுப் போற்றுவது, கரும்பு தின்னக்கைக்கூலி கொடுத்தாற்போன்று ஊக்குவதால் மேலுங் காமுறுவர் என்றார்.

இனி, இக்குறளை, கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு உலகு.இன்புறக் காமுறுவர் என்று, கொண்டு கூட்டுப் பொருள்கோள் நடையாக மாற்றின், கண்டு என்னுஞ் சொல்லொடு பொருந்தாமையால், அது ஆசிரியர் கருத்தன்றென விடுக்க.