பக்கம் எண் :

கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்.

 

கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின்-தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் கண் உரைநிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாதவரும் நனி நல்லர்-கல்லாத வரும் மிக நல்லவரேயாவர்.

உம்மை இழிவுசிறப்பு . அவையின்கண் அமைதியாயிருக்குங் கல்லாதார், பிறராற் பழிக்கப்படாது தம் சிறு மதிப்பைக் காத்துக் கொண்டும், அவையோர்க்கு வெறுப்பை விளைத்து அங்குநின்றும் அகற்றப்படாது அறிஞர் உரைகேட்டு இன்புறுவதொடு அறிவடைந்தும் , நல்லவராவ ராதலால் ' நனிநல்லார்' என்றார். ' நனி' உரிச்சொல்.

கல்லாது நீண்ட வொருவ னுலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே யிரா அ
துரைப்பினும் நாய்குரைத் தற்று. (நாலடி. 254)