பக்கம் எண் :

உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

 

கல்லாதவர்-நூல்களைக் கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; பயவாக்களர் அனையர்-பிறர்க்குப் பயன் படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.

"களர்நிலத்துப் பிறந்த வுப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினுங் கற்றுணர்ந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்."

என்று நாலடியார்(133) கூறுவதால், இங்குக் களர் என்னுஞ் சொற்குக் "காலாழ்களரின் நரியடும்" (500) என்னுங் குறளிற் போல் உளைநிலம் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். உளை நிலையான சேற்றுநிலம். கல்லாதான் பயவாமையாவது அறிவாற் பிறர்க்குதவாமை.

"பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவுங்
கல்லாதார் வாழ்வ தறிதிரேற்-கல்லாதார்
சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற்
கோதென்று கொள்ளாதாங் கூற்று."

என்னும் நாலடிச் செய்யுள்(106) இங்குக் கவனிக்கத்தக்கது. மாத்தல் அளத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. மா என்பது பல்வேறு அளவுகுறித்த சொல். மா+அனம்=மானம்=அளவு, படி. (மேலை வடார்க்காட்டு வழக்கு). மா+திரம்=மாத்திரம்=அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்பது நெல்லைவழக்கு. இதன் விலை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்பது மேலைவடார்க்காட்டு வழக்கு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித் 47:22). மா+திரை=மாத்திரை (மருந்தளவு அல்லது எழுத்தொலியளவு). அளவு-அளபு=மாத்திரை.

"மாத்திரை எழுத்தியல் அசைவகை எனா அ"(தொல்.செய்.1.)
"கண்ணிமை தொடியென அவ்வே மாத்திரை".(எழுத்-7),
மா என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் தமிழ்க் கீழ்வா
யெண்ணுப்பெயர்களுள் ஒன்று. அதன் அளவு(1/20) (1/30)
மா (ம.), மாவு (தெ.).

அரைமா, ஒருமா, ஒருமாவரை (ஒருமாரை), இருமா, மும்மா, நான்மா, மாகாணி என்பன அவ்வளவால் எற்பட்ட எண்ணுப் பெயர்கள்.

ஒரு வேலியில் இருபதிலொன்றான நில அளவு மா எனப்படும்.
"மாநிறை வில்லதும் பன்னாட் காகும் "(புறம். 184)-
ஓர் எடையில் இருபதிலொன்றான நிறையும் மா எனப்படும் (தொல்.180, உரை).

இங்ஙனம் பல்வேறு அளவு குறித்த மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர், ஆரியர் வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டு முழுத்தூய்மைத் தமிழ்ச்சொல். ஆதலால் இருக்குவேதத்தில் மா, மாத்ரா என்னும் சொற்கள் ஆளப்பட்டிருத்தல் நோக்கி மயங்கற்க. மா என்னும் முதனிலை போன்றே, அதனின்று திரிந்த மாத்திரம், மாத்திரை என்ற சொற்களும் தூய தமிழ் என அறிக. இன்றும் அது மாத்திரம், கேட்டமாத்திரத்தில், மாத்திரைக்கோல் (வரையிட்ட அளவுகோல்) எனப்பொது வழக்காக வழங்குதல் காண்க.

அளபு, மாத்திரை என்னும் இருசொற்களும் தமிழின் சொல் வளத்தையே காட்டும். "மாத்திரையின்றி நடக்குமேல்" (நாலடி242) என்பதனால், மாத்திரை என்பதன் அடிப்படைப்பொருள் அளவு என்பதேயென்று அறிந்து கொள்க. மாத்திரம்-மாத்ர(வ.), மாத்திரை-மாத்ரா (வ.) metrum (L.), metron(Gk.), meter(E.) metre, (E.) என்னும் மேலையாரியச்சொற்கள் mete (மதி=அளவிடு) என்னும் முதனிலையினின்று திரிந்தவை.