பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 42. கேள்வி

அஃதாவது ,ஒர் ஆசிரியனிடத் தமர்ந்து ஒரு நூலை அல்லது கல்வித்துறையைக் கற்றவன், அத்துறையில் தேர்ச்சி பெற்ற பேரறிஞரையடுத்துத் தான் அறியாதவற்றைக் கேட்டறிதல். இது கல்வியின் தொடர்ச்சியாதலாலும் கல்லாமையால் நேர்ந்தகுறையை நீக்குதலாலும், கல்வி கல்லாமைகளின் பின் வைக்கப்பட்டது.

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செலவஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.

 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்-ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம்; அச் செல்வம் செல்வத்துள் எல்லாம்தலை-அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையான தாகலான்.

செல்வங்கள் இருவகையும் மூவகையும் எண்வகையுமாகச் சொல்லப்படுவன. கல்வியுங் கேள்வியொடு தொடர்புடையதாய் அதனுளடங்குதலின், 'செல்வத்து ளெல்லாந்தலை' என்றார். 'கேடில் விழுச்செல்வம்' கல்வியென்பதும், 'மாடல்ல மற்றையவை' என்பதும் முன்னரே கூறப்பட்டன.