பக்கம் எண் :

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்.

 

செவிக்கு உணவு இல்லாத போழ்து-செவியுணவாகிய கேள்வியறிவிற்கு இடமில்லாத பொழுது; வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்-தீப்போலும் பசியால் வாட்டும் வயிற்றிற்கும் ஒரு சிறிது உணவு இடப்படும்.

கேள்வியறிவு பண்பட்ட மக்கட்குச் சுவைமிக்கதாயும் மறுமைக்கும் பயன்படுவதாயும் அருகியே வாய்ப்பதாயுமிருத்தலால், 'இல்லாத போழ்து' என்றும், பேருணவாயின் சோம்பலும் தேடற்றுன்பமும் நோயுங் காமமும் மிகுதலால் 'சிறிது' என்றும், அதுவும்,

"உண்டி முதற்றே உணவின் பிண்டம்" (புறம்.18),
"உடம்பா ரழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்" (திருமந். 724)

ஆதலால் பின்னும் உடம்போடிருந்து கேட்டற்பொருட்டு 'ஈயப்படும்' என்று சிறிது இழிவு தோன்றவும் கூறினார். உம்மை இழிவு கலந்த இறந்தது தழுவிய எச்சவும்மை.