பக்கம் எண் :

இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்.

 

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - ஒழுக்க முடைய பெரியோர் வாய்ச் சொற்கள்; இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே -வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல, உலகில் வாழ்க்கை நடத்துவோர்க்கும் ஆட்சிசெய்வோர்க்கும் துன்பக்காலத்தில் உதவுந் தன்மையவே.

ஒழுக்கமில்லாதார் கல்வியுடையாரேனும் அன்பில ராதலின். அவர்வாய்ச்சொல் பயன்படாதென்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார். வாய் என்றது தீச்சொல் வந்தறியாமை யுணர்த்தி நின்றது. இனி, வாய்ச்சொல் என்பது தப்பாது பயன்படும் வாய்மைச்சொல் எனினுமாம். ஏ கா ர ம் தேற்றம்.

முந்தின குறளிற் பொதுப்படக் குறிக்கப்பட்ட கேள்வியறிவைப் பெறுமிடம் இங்கு வரையறுக்கப்பட்டது.