பக்கம் எண் :

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

 

இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணிதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் பல்வேறு வகையில் திரண்ட கேள்வியறிவினை யுடையார்; பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - ஏதேனுமொரு பொருளைத் தவறாக உணர்ந்த விடத்தும், தமக்குப் பேதைமையூட்டுஞ் சொற்களைப் பிறர்க்குச் சொல்லார்.

கல்வி கேள்வி யென்னும் இருவழியாலும் அறிவுநிரம்பியவர் ஒன்றைப் பிறழவுணர்ந்த விடத்தும், பொருத்தமாகச் சொல்வர் அல்லது சொல்லாமலே விட்டு விடுவர் என்பது கருத்து. பிழைத்துணர்தல் - பிழையாகவுணர்தல், 'பேதைமை' ஆகுபொருளது. மயக்க நிலையிலும் பிறழாதுரைப்பர் என்பதற்கு, "பிழைத்துணர்ந்தும்" என்னும் தொடர் இடந்தராமை காண்க.