பக்கம் எண் :

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்.

 

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் -மேனிலை மாந்தர்போல் செவியால் நுகரப்படும் அறிவுப் பொருள்களின் சுவைகளை யுணராது, வாயால் நுகரப்படும் உணவுப் பொருள்களின் சுவைகளைமட்டும் உணரும் கீழ்நிலை மாந்தர்; அவியினும் வாழினும் என்- சாவதினால் உலகிற்கு என்ன இழப்பு? வாழ்வதனால் அதற்கென்ன பேறு?

செவியால் நுகரப்படுஞ் சுவைகள் இசைச்சுவை, சொற்சுவை, பொருட்சுவை என மூன்றாம். அவற்றுள் இசைச்சுவை சொல்லல்லாது ஓசையாக மட்டுமுள்ள கருவியிசையும் மிடற்றிசையும் என இருவகைப்படும்; சொற்சுவை தொடையும் வண்ணமும் அணியும் என மூவகைப்படும்; பொருட்சுவை மெய்ப்பாடும் அணியும் என இருவகைப்படும். மெய்ப்பாடுகள் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி, சமந்தம் (சமநிலை) எனத் தொண்டாம் (ஒன்பதாம்). இவை யெல்லாம் தொண்சுவை யென்றும், சொல்லப் பெறும். அணிகள் உவமை, உருவகம் முதலியனவாக அறுபதிற்கு மேற்படுவன.

இசைச்சுவை ஐவகைப்பட்ட அஃறிணையுயிர்களாலும் நுகரப் படுதலின், ஏனையிரண்டும்போல் அத்துணைச் சிறந்ததன்றாம். ஆயின், சொல்லொடு கூடின் மிகச்சிறந்ததாம். சொற்சுவையினும் பொருட்சுவையே சிறந்ததென்பது சொல்லாமலே விளங்கும்.

சொற்சுவைகளுள் தொடை ஐந்து; வண்ணம் எண்ணிறந்தன அணி வரையறைப்படாதன.

வாய்ச்சுவை கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என ஆறு. வாயுணவின் என்பது பாடவேறுபாடு.