பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 43. அறிவுடைமை

அஃதாவது, கல்வி கேள்விகளாலாய தெள்ளிய அறிவும் மதியுமுடைமை. அதிகார வொழுங்கும் இதனால் விளங்கும். அறிவு என்னும் சொல், அறிதல் (perception, knowing, understanding), அறிந்தசெய்தி (knowledge), ஓதி (wisdom), மதி (intelligence) என்னும் நாற்பொருளுணர்த்தும். அவற்றின் சேர்க்கை இங்கு அறிவெனப்பட்டது.

 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்.

 

அறிவு அற்றம் காக்கும் கருவி - நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; செறுவார்க்கும் அழிக்கல் ஆகா உள் அரண்- அதுவுமன்றிப் பகைவராலும் அழிக்கமுடியாத உள்ளரணாம்.

காத்தல் - முன்னறிந்து தடுத்தல். உள்ளரண் அகக்கரணக் கூறாகிய அரண், உட்புகுந்தழிக்க முடியாத நுண்பொருள் வடிவினது.