பக்கம் எண் :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்-எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும்;அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு.

தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முக்குணங்களும் பெரும்பாலர்க்கு மாறி மாறி வருவதால், நற்பொருள் பகைவர் வாயினும் தீப்பொருள் நண்பர் வாயினும், சிறந்த பொருள் இழிந்தோர் வாயினும் இழிந்தபொருள் சிறந்தோர் வாயினும், கேட்கப்படுதலால் , 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்குத்தொடர் பன்மைபற்றிவந்தது. வாய் என்பது சொல்லும் பொருட்கு ஏற்காமையுணர நின்றது. சொல்வாரை நோக்காது சொல்லும் பொருளையே நோக்கி, கொள்ளுவது அல்லது தள்ளுவது அறிவென்பதாம்.