பக்கம் எண் :

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

 

எண்பொருளவாகச் செலச் சொல்லி-பிறருக்குச் சொல்லும்போது அரியபொருள்களையும் எளிய பொருள்களாக அவர்க்கு விளங்குமாறு சொல்லி; தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு -தான் மட்டும் பிறர்வாய்க் கேட்கும் அருஞ்சொற்களின் நுண்பொருளை எளிதாய் அறிந்து கொள்வது அறிவாம்.

பொருளை அறிவிக்கும் வாயில் சொல்லேயாதலாலும், அரிய பொருளை எளிதாக்குவதும் எளிய பொருளை அரிதாக்குவதும் சொல்லின் தன்மையைப் பொறுத்திருத்தலாலும் , 'எண்பொருள வாகச் செலச்சொல்லி ' என்றார். 'வாய் ' ஆகுபெயர். அறிவு என்றது அறிவுடைமையை.