பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 44. குற்றங்கடிதல்

அஃதாவது, ஐம்பெருங் குற்றமென்றும் அறுவகை உட்பகையென்றும் சொல்லப்படும் குற்றங்களையெல்லாம், அரசனும் பிறரும் தங்கண், நிகழாதவாறு விலக்குதல். கொலை,களவு, பொய், வெகுளி. கடும்பற்றுள்ளம், மானம், உவகை, செருக்கு என்பன அறுவகையுட்பகை.

வடநூலார் இவற்றைச் சிறிது வேறுபடவுங் கூறுவர். ஆயின், அவ்விருவேறு பாகுபாட்டிற்கும் மூலம் தமிழ் என்பது தேற்றம். எனினும், அரசியற்பாகுபாடு தன் துறைக்கேற்ப மதவியற் பாகுபாட்டினின்றும், சிறிது வேறுபடும்.

அறிவுடையார்க் கல்லது இக்குற்றங்களைக் கடிதல் கூடாமையின், இது அறிவுடைமையின் பின் வைக்கப்பட்டது.

 

செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

 

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டுத் தன்மையை யுடைத்து.

செருக்கினாற் காவற்கடமை தவறுதலும் பெரியாரைப் பிழைத்தலும், சினத்தினால் ஐம்பெருங்குழுவும் உறுதிச்சுற்றமும் போன்றவற்றின் அன்பை இழத்தலும், சிறுமையினால் பழியும் உயிர்ச்சேதமும், நேருமாதலின், அக்குற்றங்களில்லாத அரசரின் செல்வம் வீறுபெற்றுதென்றார். சிறியோர் இயல்பு என்னுங் கருத்தால் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது.