பக்கம் எண் :

பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.

 

வாழ்க்கை - ஒருவனது இல்லறவாழ்க்கை; பழி அஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் - ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின் ; வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்-அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியை நீடிக்கச் செய்யும் என்பது கருத்து.