பக்கம் எண் :

மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல்.

 

மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் -மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டாகும்; இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் -ஆயின், இவன் இத்தன்மையனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.

கரணம் கருவி. இயல்பாக ஒரே தன்மையிலுள்ள மழைநீர் நன்னீ ரென்றும் உவர் நீரென்றும் வேறுபடுத்திச் சொல்லப் படுவதற்கு, அது சேர்ந்துள்ள நிலமே கரணியமாவதுபோல், இயல்பாக ஒரே தன்மையரான மாந்தரும் நல்லவரென்றும் தீயவரென்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுவதற்கு, அவர் சேர்ந்த இனமே கரணிய மென்பது கருத்து.