பக்கம் எண் :

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.

 

அறிவு -மேற்கூறிய சிறப்பறிவு; ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவனுக்கு அவன் மனத்தின் கண்ணேயுள தாவதுபோல் தன்னைத் தோற்றுவித்து; இனத்து உளது ஆகும் - உண்மையில் அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உண்டாவதாம்.

மனத்துண்டாவது போலத் தோன்றுதல் வெளித்தோற்மேயன்றி உண்மையான தன்றென்பதைக் குறிக்கக் 'காட்டி' என்றார். அதனையும் இறந்த காலத்திற் குறித்தது அது அங்ஙனந் தோன்றியது ஆராய்ந்து பார்க்குமுன் என்பதை உணர்த்தற்கே. ஒருவர் எவ்வினத்தொடுங் கூடாமல் தனிவாழ்க்கையே மேற்கொண்டிருப்பினும், அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லப்படுவதற்கு, ஏற்கெனவே பிள்ளைப்பருவத்திலிருந்து பெற்றோரும் உற்றோரும் மற்றோருமாகப் பற்பலர் தம் சொல்லாலுஞ் செயலாலும் அவர் உணர்வைச் சிறிதுசிறிதாக மாற்றியிருப்பதே கரணியம் என அறிக.