பக்கம் எண் :

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

 

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின்; புறத்தாற்றில் போய்ப் பெறுவது எவன் - அதற்குப் புறம்பாகியதுறவு நெறியிற் போய்ப் பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப் பெறும் பயன் யாது?

அறத்தாறு என்றது அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை யச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்னும் பதினாறறத் தொகுதியை. இல்லறத்தாலும் வீடுபேறுண்டாமென்பது தமிழர் கொள்கையாதலின், துறவறத்தினால் மட்டும் வீடுபெற முடியும் என்னும் ஆரியக் கொள்கையை மறுத்து, இல்லறத்தில் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் ஒல்லும் வகையால் அறவினை ஒவாதே செல்லும் வாயெல்லாம் செய்து இறுதியில் பேரின்பமும் பெறுவதாயிருக்க; துறவறத்திற் போய்ப் பசிபட்டினியாலும் தட்பவெப்ப மிகையாலும் துன்புற்றும் ஒருவர்க்கும் ஒருவகையிலும் உதவாதும், கூடாவொழுக்கத்திற் காளாகியும், ஒருகால் இறுதியிற் பிறவாவீடுபெறினும் சிறப்பாகப் பெறுவது எதுதானென்று வினவுகின்றார் ஆசிரியர். சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடு பெற்றாரென்று பெரிய புராணங் கூறுதல் காண்க. போஒய் என்பது இசைநிறை யளபெடை.