பக்கம் எண் :

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

 

வகை அறச் சூழாது எழுதல் - அரசன் தன் பகைவரை வெல்லுதற்கேற்ற வழிகளை யெல்லாம் தீர எண்ணாது, அரை குறையாய் எண்ணிய வளவில் அவர்மேற் படையெடுத்துச் செல்லுதல் ; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரைப்பாதுகாப்பான நிலைமையிலிருந்து மேலும் வலியுறச் செய்வதொரு நெறியாம் .

வெல்வதற் கேற்ற வழிகளாவன ; வலியிடங் காலம் முதலியவற்றொடு பொருந்த வெட்சி தும்பை யுழிஞை யென்னும் மூவகைப் போர் முறைகளும் , படைவகுப்பு வகைகளும் , தாக்குங் காலமும் , பகைவர் எதிர்த்துப்பொரினும் தற்காத்து நிற்பினும் தான் செய்ய வேண்டிய வினைகளும் கையாளும் வலக்காரங்களும் , படைத்தலைவர் தொடரும் வரிசையும் , வெற்றியால் விளையும் பயனும் முதலாயின . இவற்றுள் ஒன்று குறையினும் வினைகெடுமாதலின் , வகையறச் சூழ்தல் வேண்டு மென்றார் .

'பாத்திப்படுப்பது' என்பது குறிப்புருவகம் . வினைத்திறங்களை யெல்லாம் முற்றவெண்ணாது சென்று பொருது தோல்வியுறுவது பகைவரை வலுப்படுத்தவே செய்யுமாதலால் , அது மேற்கொண்டு செழித்து வளர முடியாவாறு அடர்ந்திருக்கும் நாற்றுக்களைப்பறித்துப் பாத்தியுள் இடைவிட்டு நட்டு , நன்றாய் வளரச் செய்தலை யொக்கும் என்றார்.