பக்கம் எண் :

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

 

ஆற்றின் வருந்தா வருத்தம் - தக்க வழியாற் கருமத்தை முயலாத முயற்சி ; பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - பின்பு பலர் துணை நின்று கருமங்கெடாமற் காப்பினும் கெட்டுப் போகும் .

தக்கவழியால் முயலுவதாவது , இன்சொல்லை . நேர்மையாளன் , ஆண்மையில்லாதவன் , முதுகிழவன் , உலகவுவர்ப்புற்றோன் முதலியோரிடத்தும் பொருட்கொடையைப் பொருளாசைக்காரனிடத்தும் , மகட்கொடையைக் காமுகனிடத்தும் , பிரிப்பைத்தன்னொடு பொருந்தாதவனிடத்தும் ; தண்டித்தலைக் கயவனான எளியவனிடத்தும் , பயன் படுத்துதல் . பொத்துப்படுதல் துளைவிழுதல் அல்லது ஓட்டையாதல் . அது இங்கு அணிவகைப்பொருளிற் கருமக்கேட்டைக் குறித்தது . வருந்திச் செய்யும் முயற்சி வருத்தம் எனப்பட்டது தொழிலாகுபெயர் .

இனி , வலிய படைக்கலங்களும் தகுந்த தலைவனும் நல் வானிலையும் (Weather) நிலநலமும் உணவு நிறைவும் ; அவ்வப்போது இடமும் வினையும் மாறும் பயிற்சியும் போர்விலக்காரமும் இன்றிக் குருட்டுத்தனமாக மிகப் பாடுபட்டுப் போர்செய்யும் படை எவ்வளவு பெரிதாயினும் , வெற்றியின்றி மடியும் என்றுமாம் .