பக்கம் எண் :

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
வில்லாகித் தோன்றாக் கெடும்

 

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையில் ; உளபோல இல் ஆகித்தோன்றாக் கெடும் - அவன் பல்வகைப் பட்ட பொருள்களும் உள்ளனபோலத்தோன்றி உண்மையில் இல்லாதனவாய்ப் பின்பு அப்பொய்த்தோற்றமும் இல்லாது அழியும் .

அளவறிந்து வாழ்தலாவது , செலவை வரவிற்குச் சுருக்காவிடினும் அதற்கு ஒப்பவாவது செய்து ஈந்தும் நுகர்ந்தும் வாழ்தல் . தொடக்கத்திற்கேடு வெளிப்பட்டுத் தோன்றாமையின் 'உளபோல இல்லாகி 'என்றார் .

"முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியு முளமே
குன்று முண்டுநீர் பாடினிர் செலினே."

(புறம் . 110)

என்பது ஒருவாறு இக்குறட்கு எடுத்துக்காட்டாம் .