பக்கம் எண் :

செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை .

 

செறுநரைக் காணின் சுமக்க - அரசர் தம்மினும் வலிய பகைவரைக் காணநேர்ந்தால் அவருக்கு நற்காலம் உள்ள வரை அவருக்குத் தாழ்ந்து பணிக ; இறுவரை காணின்தலை கிழக்கு ஆம் - அவர்க்கு முடிவுக்காலம் வரின் தலைகீழாக விழுந்து மாய்வர் .

பகைவரின் பகைமை யொழியும் வகை அவரைத்தலைமேற் சுமந்தாற்போல் மிகவுந் தாழ்ந்து பணிகவென்பார் சுமக்க என்றும் , அதனால் அவர் தம்மைக் காவாது நெருங்கிப்பழகுவராதலாற் காலமறிந்து தாக்கின் அவர் தப்பாது கெடுவரென்பார் 'கிழக்காந்தலை' என்றும் கூறினார் . பணிதலைத் தலைமேற் சுமத்தலாகக் குறித்தமையால் , பணியாது கொல்லுதலைத் தலைகீழாக விழுந்து சாகுமாறு தலையினின்று தள்ளுதலாகக் குறித்தார் . இவ்விரு குறள்களாலும் காலம் வரும்வரை பகைமை தோன்றாமலிருக்குமாறு கூறப்பட்டது . கீழ் - கீழ்க்கு - கிழக்கு .