பக்கம் எண் :

அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.

 

அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இரு வகை யறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூல்களாற் சிறப்பித்துச் சொல்லப்பெற்றது இல்லறமே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மையுடைத்தாயின் மிக நன்றாம்.

பிரிநிலையேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. அஃது என்னுஞ் சுட்டுப் பெயர், முற்குறிக்கப் பெற்ற இல்லறத்தைச் சுட்டுமேயன்றி அதற்கு மறுதலையானதும் ஓரிடத்துங் குறிக்கப் பெறாததுமான துறவறத்தைச் சுட்டாது. மேலும், துறவறமும் நல்லதே யென்று கூறின், அது 'அறனெனப் பட்டது இல்வாழ்க்கையே' என்னும் பிரிநிலைத்தேற்றக் கூற்றின் வலிமையைக் கெடுத்து முன்னுக்குப் பின் முரணாதல் காண்க. "இல்லற மல்லது நல்லற மன்று" என்னும் ஒளவையார் கூற்றையும் நோக்குக.

பிறன்பழிக்கும் இல்வாழ்க்கை விருந்தோம்பாமையாலும் பிறனில் விழைவாலும் வரைவின் மகளிர் தொடர்பாலும் பிறவற்றாலும் நேர்வதாம்.