பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 50. இடனறிதல்

அஃதாவது , வலியுங் காலமுமறிந்து பகைமேற் செல்லும் அரசன் தான் வெல்லுதற் கேற்ற இடத்தை யறிதல் . அதிகார முறையும் இதனால் விளங்கும் . இடம் - இடன் . அது நிலமாகவோ அரணாகவோ இருக்கலாம் .

 

தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது .

 

முற்றும் இடம் கண்டபின் அல்லது - பகைவரை முற்றுகை செய்வதற்கேற்ற இடம் பெற்ற பின்னல்லது ; எவ்வினையும் தொடங்கற்க - அவருக்கு மாறாக எவ்வினையையுந் தொடங்காதிருக்க ; எள்ளற்க - அவரைச் சிறியரென்று இகழாதிருக்க .

முற்றுதல் வளைதல் . அதற்கேற்ற இடமாவது , பெருவாயில் களாலும் திட்டிவாசல்களாலும் சுருங்கைகளாலும் பகைவர்க்குப் புகலும் போக்குமில்லாவாறு அவர் நகரரணைச் சூழ்ந்து , நால் வகைப்படைகளும் அவற்றின் நடுவே பாதுகாப்பாக அரசனும் தங்கியிருத்தற்குப் போதியதும் , உண்ணீர் அண்மையிலுள்ளதும் , சதுப்பல்லாததும் , படமாடங்களும் பரசறைகளும் ஒரேபகலில் அமைக்கக் கூடியதுமான நிலப்பரப்பாம் .