பக்கம் எண் :

எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின் .

 

இடன் அறிந்து துன்னியார் - தாம் வினைசெய்தற்கேற்ற அரணான இடத்தை யறிந்து அங்குச் சென்று தங்கிய அரசர் துன்னிச் செயின் - அவ்விடத்தொடு பொருந்திநின்று வினை செய்வாராயின் ; எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை முன்புவெல்ல எண்ணியிருந்த பகைவர் அவ்வெண்ணத்தையும் இழப்பர் .

துன்னிச் செய்தல் தாம் வெற்றிபெறுமளவும் தம் இடத்தை விட்டு அகலாது நின்று பொருதல் . எண்ணம் என்றது தாம் வெல்ல வகுத்த திட்டத்தை . முழுக்கவனமும் முயற்சியும் தற்காப்புப்பற்றியே யிருத்தலால் , வெற்றியை யிழப்பது மட்டுமன்றி வெல்ல வகுத்த திட்டத்தையும் அடியோடு மறப்பர் என்பார் 'எண்ணமிழப்பர்' என்றார் .

இந்நான்கு குறளாலும் , பகைவரரணின் புறத்து நின்று பொரும் உழிஞைப்போரரசர் அதற்கான இடமறிதல் கூறப்பட்டது .