பக்கம் எண் :

நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற .

 

முதலை நெடும்புனலூள் (பிற) வெல்லும் - முதலை தன் வாழிடமாகிய ஆழநீர் நிலையுள் யானையுட்படப் பிறவுயிரிகளை , யெல்லாம் வென்று விடும் ; புனலின் நீங்கின் அதனைப் பிற அடும் , - அந்நீர் நிலையினின்று நீங்கின் அதனின் வலிகுன்றிய உயிரிகளும் அதனை வென்றுவிடும் .

நிலத்தில் வாழும் பிறவுயிரிகட்கெல்லாம் நிலைக்கும் நீரில் எளிதாய் இயங்கவும் நிலைக்கா நீரில் நிற்கவும் இயலாமையின் , அவற்றையெல்லாம் , ஆழநீரில் இயற்கையாய் வாழ்வதும் , எளிதாய் நீந்துவதும் , முப்பதடிவரை நீண்டு வளர்வதும் , கரடுமுரடான பாறை போன்ற முதுகுள்ளதும் , யானைக்காலையும் எளிதாய்க்கௌவுமாறு அகன்று விரியும் கூர்ம்பல் அலகுகள் வாய்ந்ததும் , வலிமைமிக்க வாலுடையதுமான முதலை எளிதாய் நீர்க்குள் இழுத்தமிழ்த்திக் கொன்றுவிடும் . ஆயின் , அத்தகைய முதலை ஈரிடவாழி (Amphibian) எனப்படினும் . அதற்கு நிலத்தில் எளிதாய் இயங்கும் வலிமையுள்ள கால்களின்மையால் , அதனினும் வலிகுன்றிய நில வாழிகள் அதனை நிலத்தின்கண் எளிதாய் வென்றுவிடும் .

இது , மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்கலாற்றா இடஞ் சென்று பொருவராயின் அவரை வெல்வரென்பதும் , தாம் நிற்கலாற்றா இடஞ்சென்று பொரின் அவரால் வெல்லப்படுவர் என்பதும் , உணர்த்துகின்றமையின் பிறிதுமொழிதலணியாம் . "தன்னூர்க்கு யானை , அயலூர்க்குப் பூனை" , என்பது இங்குக் கவனிக்கத்தக்கது . பகைவர்க்கு ஊற்றமில்லாத இடஞ்சென்று பொருக என்பது கருத்து . பிற என்பது முன்னுங் கூட்டப்பட்டது .