பக்கம் எண் :

கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து .

 

வல்கால் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் வலிய சக்கரங்களுள்ள நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா ; கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - கடலின்கண் ஓடும் மரக்கலங்களும் நிலத்தின்கண் ஓடமாட்டா .

"கால்வல் நெடுந்தேர்" என்பது , வலிய சக்கரங்களும் நெடிய உயரமு முடைய வாயினும் என்பது படநின்றது . ஏழ்தட்டுக்கள் உடையது முழுத்தேர் என்றும் , ஐந்தட்டுக்கள் உடையது முக்கால் தேர் என்றும் , முத்தட்டுக்கள் உடையது அரைத்தேர் என்றும் , கூறுவர் . நெடுந்தேர் என்றது முழுத்தேரை , தேர்க்குக்கால்போன்றிருத்தலாற் சக்கரம் காலெனப்பட்டது .

முதலை நிலத்தில் மெள்ள மெள்ளவேனும் இயங்கும் . மக்களும் விலங்கு பறவைகளும் நிலைக்கும் நீரில் மெள்ளமெள்ளவேனும் இயங்க முடியும் . ஆயின் , தேர் கடலிலும் கப்பல் நிலத்திலும் இயங்கவே இயங்கா . ஆதனால் , இக்குறளிலுள்ள பிறிதுமொழிதல் மேலையதினும் வேறுபட்டதாம் .

வேற்றரசர் புகமுடியாத காவல் மிகுதியும் அரண் சிறப்பும் பொருள்வளமும் நிலப்பரப்பு முள்ள வல்லரசர் நாடுகளும் உள . அவற்றை உட்பகைத் துணைகொண்டல்லது தம் சொந்தப்படையாலும் திறமையாலும் அயலார் கைப்பற்ற முடியாது என்பதே இக்குறளின் உட்கருத்தாம் . ஆகவே , தேர்ந்த ஒற்றர் வாயிலாக அருமறைகளையெல்லாம் அறிந்து , உடனிருந்து காட்டிக்கொடுக்கும் உட்பகைவரைத் துணைக்கொண்டே மேற்செல்க என்பதாம் . 'தேர்' , 'நாவாய்' என்பன பால்பகா அஃறிணைப் பெயர்கள் . உம்மை இறந்தது தழுவிய எச்சம் .