பக்கம் எண் :

சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும் .

 

சிறு படையான் செல் இடம் சேரின் - சிறுபடையான் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் சென்று சேரின் ; உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் - அவனை வெல்லக் கருதிச் சென்ற பெரும்படையரசன் அவனை வெல்லும் வழியின்மையால் தன் ஊக்கங் கெட்டு வினையொழிந்து திரும்புவான் .

விடுதல் விட்டு நீங்குதல் , வினைக்கு இடமின்மையால் விடும் என்றார் . இது , உடும்பு முயல் முதலியவற்றைத் துரத்திச் சென்ற நாய் , அவை வளைக்குள் நுழைந்தபின் திரும்பி வருவது போன்றது . சிறுபடையான் புகுந்த இடத்திற்குச் செல்லும் வழி பெரும்படை செல்ல முடியாவாறு மிக ஒடுங்கியிருக்குமாதலாலும் , ஒவ்வொருவராகவோ சிற்சிலராகவோ செல்லத்துணியின் மேலிருந்தோ ஒரு கோடியில் நின்றோ சிறுபடை பெரும்படை முழுவதையும் வெட்டி வீழ்த்திவிடுமாதலாலும் , மலைவழியும் மரமடர்ந்த காட்டுவழியுமாயின் பெரும்படை வழிதெரியாது மயங்கி இடர்ப்பட நேருமாதலாலும் , 'ஊக்க மழிந்து விடும்' என்றார் . 1841 - ஆம் ஆண்டு நிகழ்ந்த முதலாம் ஆபுகானியப் போரில் , இந்தியப்படை முழுவதும் கைபர்க்கணவாயிற் சுட்டுக் கொல்லப்பட்டது இங்கு நினைக்கத்தக்கது . 'உறு' உரிச்சொல் .