பக்கம் எண் :

காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு .

 

கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கும் யானை மறவர்க்கும் அடங்காதனவாய்ப் போர்க்களத்தில் வேன்மறவரைக் கோட்டாற் குத்திக்கோத்த மதயானைகளையும் ; கால் ஆழ் களரின் நரி அடும் - அவை காலமிழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட விடத்து மிகச் சிறிய நரிகளும் அவற்றைக் கொன்று விடும் .

"வேலாழ் முகத்த" என்று மணக்குடவர் பாடங்கொள்வர் . வேல் பதிந்த முகத்தனவாயின் , அவை மேலும் வலிகுன்றி நரி கொல்வதற்கேதுவாக முடியுமாதலின் , அது பாடமன்றாம் . முகம் ஆகுபொருளது . களிறு மதங்கொண்ட ஆண்யானை . கள் - களி - களிறு . களி கள்வெறி போன்றயானைமதம் . இழிவு சிறப்பும்மையும் உயர்வு சிறப்பும்மையும் செய்யுளால் தொக்கன . பெரும்படையுடைய பேரரசரும் தமக்கேற்காத இடத்துச் சென்று பொரின் , மிக எளியவராலும் வெல்லவுங் கொல்லவும் படுவர் என்னும் உட்பொருள் தோன்ற நின்றமையின் , இதுவும் பிறிதுமொழிதல் அணி . இம்மூன்று குறளாலும் , பகைமேற்சென்று தாக்கலாகா இடங்களும் தாக்கின் நேருந்தீங்கும் கூறப்பட்டன . இவை நொச்சிப்போர் வெற்றியாம்.