பக்கம் எண் :

குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு

 

குடிப் பிறந்து - ஒழுக்கத்தால் உயர்ந்த குடும்பத்திற் பிறந்து ; குற்றத்தின் நீங்கி - நடுநிலையின்மை , விரைமதியின்மை அன்பின்மை , மடி , மறதி முதலியவற்றொடு ஐவகையும் அறுவகையுமான குற்றங்களினின்றும் நீங்கி , வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்குப் பழிவந்து விடுமோ என்று அஞ்சும் நாணுடையவ னிடத்ததே அரசனது தெளிவு.

குடிப்பிறந்தார் வடுப்பரிதலை,
"அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின்."

(நாலடி . 151.)

என்பதாலறிக . நாண் இழிதொழில் பற்றிய நன்மக்கள் அருவருப்பு . "கருமத்தா னாணுத னாணு" (குறள். 1011 ) என்றமை காண்க . ஏகாரம் தேற்றம் . கண்ணது - கட்டு (கண் + து ) . 'குற்றத்தினீங்கி வடுப்பரியு நாண்' உண்மையுமின்மையும் நால்வகைத் தேர்விலும் வெளிப்பட்டுவிடும் . குடிப்பிறப்பு தக்கார் உரையாலும் உறவினராலும் அறியப்படும்.