பக்கம் எண் :

பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.

 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - மக்கள் அறிவாற்றல் குணங் கல்வி பொருள் ஆகியவற்றால் அடையும் மேன்மைக்கும் மற்றக் கீழ்மைக்கும் உரைகல்லாயிருப்பது ; தம்தம் கருமமே - அவரவர் செய்யும் வினையே யன்றி வேறொன்று மன்று.

கையூட்டினாலும் இனவுணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும் , உண்மையான உயர்விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே என்பது ஆசிரியர் கருத்து . ஆகவே , வினைத்திறமையுள்ளவனையே வினைக்கமர்த்துக என்பதாம் . "பெருமையுஞ் சிறுமையுந் தான்றர வருமே," என்னும் அதி வீரராம பாண்டியன் கூற்று இக்குறட் சுருக்கமாகும். கருமத்தைக் கட்டளைக் கல்லாக உருவகித்துப் பெருமை சிறுமைகளை மாழை (உலோக) வகைகளாக உருவகியாது விட்டது ஒருமருங்குருவகம் . ஏகாரம் தேற்றம் , ஒருவனுக்கு அறிவாற்றல் மிக்கிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் வினைத்திறமின்றேல் அவற்றாற் பயனில்லை யென்பதாம் . பரிமேலழகர் பெருமை சிறுமைக்குக் கரணியமாகப் பிறப்பையுங் குறித்துள்ளார்.