பக்கம் எண் :

அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

 

அற்றாரைத் தேறுதல் ஓம்புக - மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத்தலைவராகத் தெளிதலை விட்டு விடுக ; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் வேறு தொடர்பில்லாத வராதலால் ; பழிநாணார் - பழிக்கு அஞ்சார்.

பிள்ளைகளைப் பெறாதவர்க்குப் பிறரிடத்து அன்புண்டாகா தென்பதும் , உற்றா ருறவினரில்லாதவர்க்குப் பழிபளகு (பாவம்) பற்றிய அச்சமிராதென்பதும் , பொதுவான உலக நம்பிக்கை . ஆதலால் , அத்தகையோரை வினைக்கமர்த்தின் ,குடிகள் கெடுவதொடு பொறுப்பற்ற வினையால் அரசுங் கெடும் என்பதாம் . 'பற்றிலர்' என்பதனால் உறவினர் என்பது வருவிக்கப்பட்டது . ஓம்புதல் காத்தல் ; இங்கு நிகழாவாறு காத்தல்.