பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்

அஃதாவது,இல்லறத்தானின் வாழ்க்கைத் துணையாகிய கற்புடை மனைவியின் நலங்களை எடுத்துக்கூறுதல்.

 

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

 

மனைத்தக்க மாண்பு உடையளாகி - இல்லறத்திற் கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய்; தற்கொண்டான் வளத்தக்காள் - தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள்; வாழ்க்கைத் துணை-அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.

நற்குணங்களாவன, கணவனையும் பிறக்கும் மக்களையும் பேணுதலும் அன்பாக விருந்தோம்புதலும் துறவியரைப் போற்றுதலும் இரப்போர்க்கு ஈதலும் முதலியன, நற்செய்கைகளாவன, அறுசுவை யுண்டிகளைச் சுவையாகச் சமைத்தலும் வீட்டையும் பொருள்களையும் பாதுகாத்துக் கொள்ளுதலும் அக்கம் பக்கத்தாரொடு நட்பாயிருத்தலும் கணவன் உத்தரவின்றி வீட்டைவிட்டு வெளியேறாமையும் முதலியன.