பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்

அஃதாவது , ஆராய்ந்து தெளியப்பட்ட வினைத்தலைவரை , அவரவர் திறமறிந்து அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவதன்கண் அவரை ஆண்டு நடத்துதல் . அதிகார முறையும் இதனால் விளங்கும்.

 

நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும் .

 

நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் தனக்கிட்ட பணியில் அரசனுக்கு நல்லனவும் தீயனவு மானவற்றை ஆராய்ந்து ; நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் நல்லனவற்றையே விரும்பிய இயல்பையுடையான் ; ஆளப்படும் - பின் அரசனால் உண்மையானவன் என்று அறியப்பட்டுச் சிறந்தவினைகளில் ஆளப்படுவான்.

நொதுமலாகவோ பகையாகவோ வுள்ள வேற்றரசனிடம் தூது போன விடத்துத் தன்னரசனுக்கு நன்மையாகவே வினைமுடித்தவன் , பின்னும் அவ்வியல்பினனாகவே யிருப்பானென்று நம்பப்பட்டு , அத்துறையிலும் அதுபோன்ற பொறுப்பு வாய்ந்தனவும் உயிர்நாடியானவுமான பிறதுறைகளிலும் ஆளப்படுவான் . இங்ஙனமே , விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயருக்கு நாகம நாயக்கன் இருந்தது போலன்றி , அவன் மகன் விசுவநாத நாயக்கன் இருந்ததுபோல் உண்மையான படைத்தலைவனே நிலையான படைத்தலைமைக்கு அமர்த்தப்படுவான் . 'புரிந்த' என்னும் இறந்த காலப் பெயரெச்சத்தால் , வினைக்குரியதகுதி யறிதற் பொருட்டு முன்னிட்ட பணியென்பது அறியப்படும்.