பக்கம் எண் :

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை .

 

வாரி பெருக்கி - பொருள் வருவாய்களை விரிவாக்கியும் பல்குவித்தும் பெருகச் செய்து ; வளம் படுத்து - அவற்றாற் செல்வத்தை வளர்த்து ; உற்றவை ஆராய்வான் - அவற்றிற்கு நேர்ந்த இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவனே ; வினை செய்க - அரசனுக்குத் தலைமை யமைச்சனாக விருந்து பணியாற்றுக.

வருவாய்கள் அரசிறை (புரவுவரி ) , திறை , தண்டம் , புதையல் , உழவு , கால்நடைவளர்ப்பு , கைத்தொழில், வாணிகம் முதலியன . செல்வங்கள் அவற்றால் வருவனவும், அரசனுக்கும் குடிகட்கும் இன்பநுகர்ச்சிப்பொருட்டு அமைக்கப்படுவனவுமாம். இடையூறுகள் அரசியல் வினைஞர் , அரசன் சுற்றத்தார் , பகைவர் , கள்வர் , கொள்ளைக்காரர் , அஃறிணையுயிரிகள் , இயற்கை தெய்வம் என்றிவரால் வரும் நலிவும் இழப்பும் . அஃறிணையுயிரிகள் பூச்சிபுழுக்களும் காட்டு விலங்குகளும் போல்வன . இயற்கையால் நேர்வன வெள்ளப்பாழ் புயற்சேதம் முதலியன . தெய்வத்தால் வருவன கொள்ளை நோய் , பஞ்சம் முதலியன , இயற்கை யென்பது இயல்பாக நிகழ்வதன் மிகையென்றும் , தெய்வம் என்பது இயற்கைக்கும் மக்கள் தடுப்பிற்கும் அப்பாற்பட்ட தென்றும் , வேறுபாடறிக.