பக்கம் எண் :

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

 

வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது ; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் , அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க.

ஆராய்க என்று பொதுப்படச் சொல்லினும் , திறமையும் அண்மையும் ஒருங்கே யுடையாரை மறைவாகவும் , அவையில்லாதாரை வெளிப்படையாகவும் , ஆராய்தல் வேண்டுமென்பது அறியப்படும் . அரசன் எப்போதும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமுமாகிய வினைசெய்வாரைக்கொண்டே ஆட்சி நடாத்துதலால் , 'வினைசெய்வான் கோடாமை கோடாதுலகு' என்றார் . மன்னன் இங்குக் குறுநில மன்னன் என்னும் சிறப்புப் பொருள் குறியாது , அரசன் என்னும் பொதுப்பொருள் குறித்தது. வினைசெய்வான் வகுப்பொருமை. 'உலகு' உலகின் பகுதியாகிய நாட்டைக் குறித்தலால் முதலாகுபெயர்.