பக்கம் எண் :

சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன் .

 

செல்வம் பெற்றத்தான் பெற்ற பயன் - ஒருவன் செல்வம் பெற்றதனாற் பெற்ற பயனாவது ; சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் உறவினத்தால் தான் சூழப்படும் வகை அதைத் தழுவி யொழுகுதலாம்.

சுற்றத்தாற் பெறும் பயன் செல்வமென்று மேற்கூறியவர் , இங்குச் செல்வத்தாற் பெறும்பயன் சுற்றமென்று மறுதலை நயம்படக் கூறினார் . அரசனுக்குச் சுற்றத்தாற் செல்வம் மட்டு மன்றிப் பாது காப்பும் ஆட்சித்துணையும் ஏற்படுவதால் , அரசன் சுற்றந்தழுவுவதாற் சுற்றத்திற் குண்டாகும் நன்மையினும் அரசனுக்குண்டாகும் நன்மை பெரிதென்பதாம் . பெற்றது - பெற்றதால் - பெற்றத்தால் . பெற்றதால் என்பது எதுகைநோக்கி விரிந்தது. அது - அத்து.

'பெற்ற' வென்பதனுள் அகரமும் , அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன , என்பர் பரிமேலழகர் !