பக்கம் எண் :

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்.

 

வேந்தன் பொது நோக்கான் வரிசையா நோக்கின் - அரசன் எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின் ; அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் உறவினர் பலராவர் .

எல்லாவகையிலும் மக்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ தலையாயார் இடையாயார் கடையாயார் என்றோ , முதல்வகுப்பினர் இரண்டாம் வகுப்பினர் எனப்பல வகுப்பின ராகவோ , இயற்கையாகவும் செயற்கையாகவும் பாகுபட்டிருத்தலால் , தன்மானமுள்ள மேலோர் நீங்காவாறு பொது நோக்கை விலக்கி எல்லாரையும் தழுவுமாறு வரிசைநோக்கை நெறியிட்டார் . 'வேந்தன்' என்பது இங்குத் தன் சிறப்புப் பொருள் குறியாது அரசன் என்னும் பொருள் குறித்து நின்றது.